Child finger incident action taken against nurse

வேலூர் மாவட்டம் முள்ளிப்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ். ஆட்டோ ஓட்டுநரான விமல்ராஜுக்கு நிவேதா என்ற மனைவி உள்ளார். இத்தகைய சூழலில் தான் நிறைமாத கர்ப்பிணியான நிவேதிதாவைப் பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். இதனையடுத்து கடந்த 24ஆம் தேதி நிவேதிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு மருத்துவமனையில் ஊசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் கையில் ஓட்டப்பட்டிருந்த பிளாஸ்டரை செவிலியர் அருணா என்பவர் கத்தரிக்கோலால் அகற்றும்போது தவறுதலாக வலது கையின் விரல் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிகிச்சையில் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வனியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தையின் விரல் துண்டான சம்பவத்தில் செவிலியர் அருணா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisment

இதனையடுத்து புகாருக்கு உள்ளான செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாகச் சிகிச்சை அளிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையின் போது பச்சிளம் குழந்தையின் விரல் துண்டான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.