/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/poice-siren_27.jpg)
திருவண்ணாமலை நகரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே ஒரு பிரபல ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலில் ஸ்வீட்ஸ் அன்ட் பேக்கரியும் உள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணா நகரைச் சேர்ந்த ஆதாம் என்பவர் தனது இரண்டாவது குழந்தை ஷப்பியாவுக்கு 3வது பிறந்தநாளை முன்னிட்டு ஹோட்டல் பேக்கரியில் பிறந்தநாள் ஐஸ் கேக் ஆர்டர் தந்துள்ளார்.
இரவு 7 மணியளவில் ஃபர்த்டே கேக் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் குவிந்திருக்க பிறந்தநாள் கேக்கை குழந்தை கட் செய்துள்ளது. அந்த கேக்கை குழந்தைக்கும், தனது மூத்த மகன் 5 வயது இர்பான்க்கு பெற்றோர்கள் ஊட்டிவிட்டுள்ளனர். கேக்கை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மூன்று வயது குழந்தை வாந்தி எடுத்துள்ளது, வயிற்று போக்கும் ஏற்பட்டுள்ளது. கேக் சாப்பிட்ட உறவினர்கள் கேக் நல்லாயில்லப்பா, நாற்றம் அடிக்குது எனச்சொல்ல அவர் கேக் வாங்கி சாப்பிட்டும், முகர்ந்து பார்த்துள்ளார், கேக் கெட்டுப்போய் இருந்துள்ளதாக முடிவு செய்துக்கொண்டு அந்த கேக்கை அப்படியே எடுத்துக்கொண்டு தனது நண்பர்கள் இருவருடன் ஹோட்டலுக்கு வந்து என்னங்க கெட்டுப்போன கேக் தந்திருக்கிங்க, குழந்தை வாந்தி எடுத்துடுச்சி எனக்கேட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள், கேக் வாங்கிக்கிட்டு போனதுக்கு பிறகு நாங்க பொறுப்பில்ல எனச் சொல்லியுள்ளார்கள். இதில் கடுப்பாகி சத்தம் போட்டுள்ளார்.
இப்போ என்ன குழந்தைக்கு, வாந்திதானே என ஊழியர் ஒருவர் கேட்டதாக கூறப்படுகிறது. அதைக்கேட்டு கோபமானவர், தனது உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தந்துள்ளார். அண்ணாநகர் பகுதியில் இருந்து 200க்கும் அதிகமானவர்கள் இரவு 9 மணிக்கு திரண்டுவந்து ஹோட்டலை முற்றுகையிட்டனர். இதனால் மத்திய பேருந்து நிலையம் பகுதியே பரபரப்பானது. ஹோட்டல் வாசலில் தனது மனைவியுடன் அமர்ந்து நியாயம் கேட்டு கோஷங்கள் எழுப்பினர் ஆதாம்.
தகவலறிந்து வருவாய் கோட்டாச்சியர், தாசில்தார், துணை காவல் கண்காணிப்பாளர் என அதிகாரிகள் வந்தனர். காவலர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வரவைத்து அந்த ஐஸ் கேக் சோதனைக்காக மாதிரி எடுத்துக்கொண்டவர்கள், கேக் செய்யும் உணவு பொருட்களையும் பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டுள்ளனர் அதிகாரிகள். இதுக்குறித்து புகார் தந்தால் விசாரணை நடத்துகிறோம், டெஸ்ட் ரிசல்ட் வந்தபிறகு நடவடிக்கை எடுக்கிறோம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சொன்னதன் அடிப்படையில் ஹோட்டலை முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பிரபல சைவ ஹோட்டலில் சாம்பாரில் எலி தலை இருந்து அந்த ஹோட்டலுக்கு, உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்தது. அதற்கு முன்பு அதே ஆரணியில் இரண்டு பிரபல ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியில் சமைத்து தந்ததை சாப்பிட்ட ஒருபள்ளி மாணவன் பலியானான். பலர் உடல் உபாதைக்கு ஆளாகினர். இப்போது திருவண்ணாமலை நகரத்திலும் இது நடந்துள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் சுற்றுலா பயணிகளாக திருவண்ணாமலை நகரத்துக்கு வருகின்றனர். அப்படிப்பட்ட நகரத்தில் கெட்டுப்போன உணவு பொருள் விற்கிறார்கள், உணவு விலை அதிகம், சுத்தம்மில்லாத இடத்தில் உணவு சமைப்பது என திருவண்ணாமலை ஹோட்டல்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உண்டு. இவைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)