/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1212.jpg)
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில், சம்பவத்தன்று மகப்பேறு மருத்துவப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்களிடம் துறை ரீதியான விசாரணை நடந்துவருகிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூரைச் சேர்ந்தவர் அருள்மணி (35). மரத்தச்சு வேலை செய்பவர். இவருடைய மனைவி மாலினி (19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினிக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி இரவு 7 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.மறுநாள் காலையில் மாலினி கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வந்த பார்த்தபோது அவருடைய குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச்சென்றுவிட்டது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த மாலினி அளித்த புகாரின்பேரில் தர்மபுரி நகரக் காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். குழந்தையைக் கடத்தியதாக தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள இண்டூரைச் சேர்ந்த தன்ஷியா (20), அவருடைய கணவர் ஜான்பாஷா (24), தன்ஷியாவின் தாயார் ரேஷ்மா (41), பாட்டி பேகம்பீ (63) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_290.jpg)
குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியம் இல்லாததால் ஆண் குழந்தையைக் கடத்திச் சென்றதாக விசாரணையின்போது தன்ஷியா கூறியுள்ளார்.
குழந்தையைக் கடத்திச்செல்லும் திட்டத்துடன்தான் தன்ஷியா, அவருடைய தாயார், பாட்டி ஆகிய மூவரும் சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே தர்மபுரி அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்குள், கர்ப்பிணி பெண்ணுக்கு உதவியாளர்கள் போல நுழைந்து அங்கேயே பதுங்கி இருந்துள்ளனர்.
புதிதாக பெற்றெடுத்த தன்னுடைய ஆண் குழந்தையைப்படுக்கையில் விட்டுவிட்டு மாலினி கழிப்பறைக்குச் சென்றிருந்த நேரத்தை நோட்டமிட்ட அவர்கள், குழந்தையைத் தூக்கிச்சென்றுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, தர்மபுரி அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்குள் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதும், கர்ப்பிணி தாய்மார்களின் உதவியாளர்கள் என்று ஒவ்வொரு உள் நோயாளிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வார்டுக்குள்ளேயே சுற்றி வருவதுதான் இதுபோன்ற சிக்கலுக்கு காரணம் என்கிறார்கள்.
இது தொடர்பாக நாம் தர்மபுரி அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ. சந்திரசேகரிடம் கேட்டபோது, தற்போது விடுப்பில் இருப்பதாகவும், இதுகுறித்து மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் மலர்விழியிடம் கேட்டுக்கொள்ளும்படியும் கூறினார்.
இதையடுத்து நாம் மருத்துவர் மலர்விழியிடம் பேசினோம். ''தர்மபுரி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் மட்டும் பிரசவத்திற்கு வரும் பெண்கள், கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு, இன்ன பிற மகளிர் நலன் சார்ந்த பிரச்சனைகள் என ஒருநாளைக்கு 300 பேர் வந்து செல்கின்றனர். தினமும் சராசரியாக 30க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_74.jpg)
சிகிச்சைக்கு வரும் பெண்ணுக்கு உடனாளராக ஒருவருக்கு மட்டுமே அனுமதியுண்டு. ஆனாலும் ஏதேதோ காரணங்கள் சொல்லி இரண்டு மூன்று பேர் உள்ளே வந்துவிடுகின்றனர். ஒருகட்டத்திற்கு மேல் எங்களாலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும் உண்மைதான். சிகிச்சை முடிந்து குழந்தையுடன் செல்லும் பெண்களிடம் அதுகுறித்து விசாரித்துவிட்டு அனுப்புவது செக்யூரிட்டி கார்டின் வேலை. ஆனால் சம்பவத்தன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்போதுதான் முதன்முதலாக இதுபோன்ற அசம்பாவிதம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளியுடன் ஒரே ஒரு உடனாளருக்கு மட்டுமே அனுமதி என்று ஸ்டிரிக்டாக சொல்லியிருக்கிறோம். சிகிச்சைக்கு வரும்போதும், சிகிச்சை முடிந்து செல்லும்போதும்தீவிரமாக கண்காணிக்கிறோம்.குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணும், அவருடைய உறவினர்களும் மகப்பேறு மருத்துவப் பிரிவில்தான் நான்கு நாட்களாக நோயாளியின் உடனாளர்கள் என்ற போர்வையில் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை கடத்தல் சம்பவம் நடந்த அன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் மகப்பேறு பிரிவில் யார் யார் பணியில் இருந்தார்கள் என அனைத்து ஊழியர்களிடமும் துறை ரீதியான விசாரணை நடந்துவருகிறது'' என்றார் மருத்துவர் மலர்விழி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)