ADVERTISEMENT

முதல்வரின் அறிவிப்பு; நன்றி சொன்ன முல்லைப் பெரியாறு விவசாய சங்கங்கள் 

09:20 AM Jan 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்மாவட்டத்தில் உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் கட்டி கொடுத்திருக்கிறார்.

இப்படி முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த பென்னிகுவிக்கை இந்த ஐந்து மாவட்ட விவசாயிகளும், பொது மக்களும் கடவுளாக எண்ணி தங்கள் கடைகளுக்கும் பிள்ளைகளுக்கும் பென்னிகுவிக் பெயரவே தொடர்ந்து வைத்து வருகிறார்கள். அதுபோல் பென்னிகுவிக் பிறந்த நாளான டிசம்பர் 16ஆம் தேதி நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை பொங்கல் வைத்து தங்கள் வீட்டு விழா போல் கொண்டாடுவது வழக்கம். லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் பொங்கல் வைத்து விழா கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கடந்த 16ஆம் தேதி பட்டி தொட்டி முதல் மணி மண்டபம் வரை பொது மக்களும், விவசாயிகளும் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பென்னிகுவிக் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல், இந்தாண்டும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சரவணகுமார், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோர் அரசு சார்பில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான முத்துராமலிங்கம் உள்பட விவசாய சங்க நிர்வாகிகளும் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.சும் பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்தினார். பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கர்னல் பென்னிகுவிக்குக்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் உள்ள பூங்காவில் சிலை வைக்கப்படும்; அதற்கான பணிகளை இங்கிலாந்திலுள்ள தமிழர்கள் மூலம் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்று கூறினார். அதைக்கேட்டு 5 மாவட்ட விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

இது சம்பந்தமாக ஐந்து மாவட்ட விவசாயச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொன்காட்சிக் கண்ணனிடம் கேட்டபோது, “இங்கிலாந்தில் பிறந்தும்கூட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்துதான் முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் எங்களுக்காக கட்டிக் கொடுத்துவிட்டுப்போனார். அந்த நன்றியை உலகம் இருக்கும்வரை தென்மாவட்ட மக்கள் மறக்க மாட்டார்கள். ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த கர்னல் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தியதின் பேரில்தான் லோயர் கேம்பில் மணிமண்டபம் கட்டி பென்னிகுவிக் சிலையையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அதுபோல் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு இங்கிலாந்து நாட்டிலேயே சிலை வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதற்காக 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பிலும் பொது மக்கள் சார்பிலும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முல்லைப் பெரியார் அணையை நேரில் சென்று ஆய்வு செய்துவந்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை வருடத்திற்கு ஒரு முறையாவது முதல்வர், அமைச்சர்கள் யாராவது ஒருவர் நேரில் பார்த்து வந்தால்தான் கேரளாக்காரர்களுக்கு பயம் இருக்கும். தற்போது 142 அடியிலிருந்து 152 அடிவரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்க முடியும். கடந்த காலங்களில் தேக்கடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று ரசித்து இருக்கிறார்கள். அதுபோல் பள்ளி மாணவ மாணவிகள்கூட முல்லைப் பெரியாறு அணையைப் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். நானும் மூன்று முறை மாணவப் பருவத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு போய் வந்திருக்கிறேன். அந்த அளவுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடுவது பயனுள்ளதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளையும் மாணவ மாணவிகளையும் அனுமதிக்காமல் வெறும் போட்டிங் மட்டும் போய்வரும் நிலை தற்போது இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, தமிழக முதல்வரும் கேரளா முதல்வரும் பேசி மீண்டும் முல்லைப் பெரியாறு அணை வரை சுற்றுலா பயணிகள் போய் வர அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT