/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a56_0.jpg)
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதிய கடிதம் போலீசார் வசம் சிக்கியுள்ளது.
மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.
உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.
இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெங்களூரிலிருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார் குஜராத்விரைந்தனர்.
குஜராத் காந்திநகர் பகுதியில் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் தோட்டப் பகுதியில் விஷம் அருந்தி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சூர்யா தற்கொலை குறித்து எழுதி வைத்துள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில், 'பள்ளி மாணவன் கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும் தன் மீது மைதிலி ராஜலட்சுமி பொய்யான புகாரை கொடுத்திருக்கிறார். தனது கணவருக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இது குறித்து முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)