Chief Secretary's important instructions to health officials

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பு வகித்து வந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் இன்று (19.08.2024) பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Advertisment

இந்நிலையில் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் இன்று (19.08.2024) மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை மற்றும் சுகாதாரத் துறை மூத்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

Chief Secretary's important instructions to health officials

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், “அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் இணைந்து பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்படும். இந்த தணிக்கையின் மூலம், பாதுகாப்பு ஏற்பாடுகளின் தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்து, மேம்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழியவேண்டும். சென்னை மற்றும் பிற காவல் ஆணையர் அலுவலகங்களில் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்டங்களில், காவல்துறை கண்காணிப்பாளர்கள் இந்தத் தணிக்கை குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர்களும் இதில் பங்கேற்பார்கள்.

மருத்துவமனைகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் அவற்றின் காட்சிப்பதிவுகளை மத்தியக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனையின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும், குறைந்தது ஒரு மாத சேமிப்புத் திறன் கொண்ட போதிய எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்களை நிறுவித் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் வார்டுகள், வழித்தடங்கள், பணி அறைகள் மற்றும் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் சரியான முறையில் விளக்குகள் பொருத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisment

அனைத்து மருத்துவமனைகளிலும் ஒப்பந்தப் பாதுகாப்புப் பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையின் மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும், அவர்கள் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி பெற வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள புறக்காவல் நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இருக்க வேண்டும். காவலர்கள் மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்தார். அதே சமயம், “அனைத்து மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் அவசர உதவி தேவைப்படும்போது காவல் உதவி செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகச் செய்தி அனுப்பலாம்” என காவல்துறை தலைமை இயக்குநர் ஆலோசனை வழங்கினார்.