Chief Secretary Briefing on Migjam Storm Relief Mission

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் மீட்புப் பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர 95% சரி செய்யப்பட்டுள்ளது. சுமார் 18 ஆயிரத்து 780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்.

சென்னையில் பால் மற்றும் தண்ணீர் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் கடைகள் மூலம் பால், காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று (07.12.2023) 50 வாகனங்களும், நாளை முதல் 150 வாகனங்களும் இதற்காக இயக்கப்படும். 22 சுரங்கப் பாதைகளில் 20 சுரங்கப் பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று இரவுக்குள் மீதமுள்ள பாதைகள் சரி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

Advertisment