
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் (10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளோடு தொடர்புகொண்டு ஆலோசனை கூறிவருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் துரித கதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் நேரில் ஆய்வுசெய்து, அங்கு வந்த அழைப்புகளுக்குப் பதிலளித்தார். முதல்வரின் திடீர் வருகையால் எழிலகத்தில் அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.