Advertisment

4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்

Chief Minister's Important Instruction to 4 District Collectors

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். அதில், “கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக சு. நாகராஜன், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக இரா. செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக பா.ஜோதி நிர்மலா, தென்காசி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக சுன்சோங்கம் ஜதக் சிரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று (17-12-2023) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொளிவாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு,அதிகனமழையினை எதிர்கொள்ளத்தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சிகளின் இயக்குநர் சு.சிவராசு, கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர் கோ. பிரகாஷ் ஆகியோர் இம்மாவட்டங்களில் இருந்து பணிபுரிய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகனமழை காரணமாகப் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 2.18 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காகத்தேவைப்படும் இடங்களில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் மூலம் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிவாரண முகாம்களைத்தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்குத்தேவையான உணவு,பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்குத்தேவையான பால் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களையும், போதுமான படகுகளையும் நிலைநிறுத்த வேண்டும். ரொட்டி, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

instruction rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe