Skip to main content

தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பு!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Chief Minister's announcement about providing relief to the people of South District

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடியில் இன்று காலை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, ராஜகண்ணப்பன், சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்வில் சிறுமி ஒருவர் தனது சேமிப்பை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசுகையில், “கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17 ஆம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்திருக்கிறது. இந்த மழைப் பதிவு என்பது வரலாற்றில் இதுவரை இல்லாதது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை மக்கள் அறிவார்கள். காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழை பெய்தது. இதனால் அந்த பகுதியே வெள்ளக் காடாக மாறியது. 150 ஆண்டுகளில் இல்லாத மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளன. 

Chief Minister's announcement about providing relief to the people of South District

மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மக்களைப் போல் தென்மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்குத் தலா ரூ.1,000 வழங்கப்படும்.

சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றை தேசியப் பேரிடராக மத்திய அரசு இன்னும் அறிவிக்கவுமில்லை. நிதியும் ஒதுக்கவில்லை. சென்னைக்கு மட்டும் ரூ. 1500 கோடி நிதியை தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. மத்திய அரசு விடுவித்த ரூ. 450 கோடி வழக்கமாகத் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கான தொகைதானே தவிர, வெள்ள நிவாரணத் தொகை அல்ல. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளித்தது தவணைதானே தவிர கூடுதல் நிதி அல்ல. அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தர வேண்டும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.