Skip to main content

'முதல்வரின் நிர்வாகத் தோல்வி; உயர்நீதிமன்றத்திற்கு சல்யூட்'-தவெக விஜய் கருத்து 

Published on 28/05/2025 | Edited on 28/05/2025
'Chief Minister's administrative failure; thanks to the High Court' -tvk Vijay's comment

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) அப்பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இந்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்தன. இவ்வழக்கில்  இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று (28.05.2025) இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றாவளி என தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் மீதான 11 பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது ” என நீதிபதி வாசித்தார்.  

மக்கள் மத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வழக்கில் 5 மாதங்களில் அனைத்து விசாரணைகளும்  முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'எக்ஸ்' வலைத்தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய், 'அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.

'Chief Minister's administrative failure; thanks to the High Court' - tvk Vijay's comment



இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது. அப்போது, தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால் முதல் தகவல் அறிக்கை வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இருந்தே இந்தத் தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை.

தொடர்ந்து இவ்வழக்கைத் துரிதமாக விசாரிக்க, டிசம்பர் 28ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகே ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றதால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வழக்கில் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் தோல்வியின் காரணமாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழ்நாடு காவல்துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை தி.மு.க. தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார் என்பதை அனைவரும் அறிவர்.

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காகத் தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க மகளிர் பக்கம் நின்று தெரிவித்துக்கொள்கிறேன்' என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்