
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் எந்த ரூபத்திலும் நுழைவுத்தேர்வை அனுமதிக்க முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தின்போது, தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கக் கூடாது எனவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளுக்கு இளநிலை, முதுநிலை சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த யுஜிசி அறிவிப்பு வெளியிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அதே சமயம், தமிழ்நாட்டில் எந்த ரூபத்தில் நுழைவுத்தேர்வு வந்தாலும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பார். கலைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை அனுமதிக்க மாட்டோம். பல்கலைக்கழகங்களின் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்காணித்து வருகிறார். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு முழு முயற்சி மேற்கொள்ளும்" எனத் தெரிவித்தார்.