​The Chief Minister will inaugurate the Women's Entitlement Scheme Camp today

மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல், அரசாணை வெளியிடுதல், சிறப்பு அதிகாரிகள் நியமித்தல் என பல்வேறு நடவடிக்கைகளைத்தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்ப விநியோகம் ஆகியவை ரேசன் கடைகள் மூலமாக நேரடியாக விண்ணப்பதார்களின் வீடுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 35 ஆயிரத்து 923 முகாம்கள் நடைபெற உள்ளன.இதற்காக விரிவான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “உதவித் தொகைகளுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கக் கூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கைம்பெண், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு 845 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன். கலைஞர் நூற்றாண்டு திட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன்” எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது