Advertisment

ரூ.2000 கிடைக்குமா? கிடைக்காதா? -எடப்பாடியின் தேர்தல் அரசியலால் வலுக்கிறது சந்தேகம்! 

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குச் சிறப்பு உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. உடனே தேர்தலை மனதில் கொண்டு வாக்காளர்களுக்கு சட்டபூர்வமாக பணம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

Advertisment

e

சட்டப்பஞ்சாயத்து இயக்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால், ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கத் தடையில்லை என்று நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அதனால், தலைமைச் செயலகத்தில் வைத்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதற்கிடையே, நிதியுதவி பெறும் பயனாளிகள் தேர்வில் குளறுபடி இருப்பதாக விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த மனுவில், ‘வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை என்று கூறிவிட்டு, தேர்தலை மனதில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் எல்லோருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘9 பேர் கொண்ட குழு பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்வதாக அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது. இது முறைகேட்டுக்கு வழி வகுக்கும்’ என்றும் அவர் முறையிட்டிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, “நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது. அதனால், சிறப்பு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொகை நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும், பயனாளிகளின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டது” என்று கூறினார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, ரூ.2000 திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால், தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக தூத்துக்குடி பொதுக் கூட்டத்தில் இன்று (02-04-2019) பேசியபோது குறிப்பிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்தவுடன் கண்டிப்பாக ரூ.2000 கொடுப்போம் என்றார். தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, புதிய திட்டத்தைத்தான் தொடங்க முடியாது, ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதில் தடையில்லை என்பதே யதார்த்தம்.

மார்ச் 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொல்கிறார் - தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று. இன்றைக்கு முதல்வர், தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்ததால் நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று கூறுகிறார். திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

நீதிமன்றத்தில் அரசாங்கமே, நாங்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு, இப்போது திமுக மீது முதல்வர் பாய்வது ஏன்? அது அரசியலுக்காகவே என்று எடுத்துக் கொண்டாலும், ஏழை மக்களின் கேள்வியெல்லாம், அந்த 2000 ரூபாய் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தான்.

யாராவது தேர்தலுக்குப் பிறகு பிரச்சாரம் செல்வார்களா? மாட்டார்கள்தானே! அதுபோல், தேர்தலுக்குப் பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்! தேர்தல் அரசியலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் உண்மையைத் திரித்துப் பேசியதால், வாக்காளர்களின் அடிமனதில் ‘2000 ரூபாய்’ குறித்த சந்தேகம் அழுத்தமாக எழுந்துள்ளது.

Chief Minister of Tamilnadu edappadi palanisami
இதையும் படியுங்கள்
Subscribe