Advertisment

ஏழு தமிழர் விடுதலையை அறிவிக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி உறுதிசெய்யவேண்டும் - கருணாஸ் 

kovai

தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி ஏழு தமிழர் விடுதலையை அறிவிக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி உறுதிசெய்யவேண்டும் எம்.எல்.ஏ. கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

இது குறித்த அவரது அறிக்கை: ‘’முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Advertisment

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது. இதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில்தான் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன்சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு 6.9.2018 இன்று வழங்கியுள்ளது.

7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

கொலையுண்ட ராஜீவ் காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்!

இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது. ஆனால் காலம் கடந்தாலும் இப்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அந்த விடுதலை வாய்ப்பை வழங்கியுள்ளது.

இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனமான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்! இதை உச்சநீதிமன்ற எடுத்துரைத்துவிட்டது!

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும். ஏழு தமிழர்களை விடுதலை செய்யவேண்டும்.’’

karunas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe