Skip to main content

ரூ.2000 கிடைக்குமா? கிடைக்காதா? -எடப்பாடியின் தேர்தல் அரசியலால் வலுக்கிறது சந்தேகம்! 

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குச் சிறப்பு உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. உடனே தேர்தலை மனதில் கொண்டு வாக்காளர்களுக்கு சட்டபூர்வமாக பணம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

 

e

 

சட்டப்பஞ்சாயத்து இயக்கம்,  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால், ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கத் தடையில்லை என்று நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அதனால், தலைமைச் செயலகத்தில் வைத்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

இதற்கிடையே,  நிதியுதவி பெறும் பயனாளிகள் தேர்வில் குளறுபடி இருப்பதாக விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வழக்கு தொடுத்தார்.  அந்த  மனுவில்,   ‘வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை என்று கூறிவிட்டு, தேர்தலை மனதில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் எல்லோருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும்,    ‘9 பேர் கொண்ட குழு பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்வதாக அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது. இது முறைகேட்டுக்கு வழி வகுக்கும்’ என்றும் அவர் முறையிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி,  “நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது. அதனால், சிறப்பு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொகை நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும்,  பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும், பயனாளிகளின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டது” என்று கூறினார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

 

உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, ரூ.2000 திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால், தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக தூத்துக்குடி பொதுக் கூட்டத்தில் இன்று (02-04-2019) பேசியபோது  குறிப்பிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்தவுடன் கண்டிப்பாக ரூ.2000 கொடுப்போம் என்றார். தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, புதிய திட்டத்தைத்தான் தொடங்க முடியாது, ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதில் தடையில்லை என்பதே யதார்த்தம்.

 

மார்ச் 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொல்கிறார் - தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று.   இன்றைக்கு முதல்வர், தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்ததால் நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று கூறுகிறார். திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

 

நீதிமன்றத்தில் அரசாங்கமே, நாங்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு, இப்போது திமுக மீது முதல்வர் பாய்வது ஏன்? அது அரசியலுக்காகவே என்று எடுத்துக் கொண்டாலும், ஏழை மக்களின் கேள்வியெல்லாம்,  அந்த 2000 ரூபாய் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தான்.


யாராவது தேர்தலுக்குப் பிறகு பிரச்சாரம் செல்வார்களா? மாட்டார்கள்தானே! அதுபோல், தேர்தலுக்குப் பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்! தேர்தல் அரசியலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் உண்மையைத் திரித்துப் பேசியதால், வாக்காளர்களின் அடிமனதில் ‘2000 ரூபாய்’ குறித்த சந்தேகம் அழுத்தமாக எழுந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய்பீம்’ அங்கீகாரம் சிலிர்ப்பூட்டுகிறது; முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 The 'Jaibhim' recognition Thanks Surya

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர். சர்வதேச அரங்கில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள இப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்று பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகர் சூர்யா தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள் எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடையச் செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

Next Story

“பெண்கள் யாரும் இதை தவறாக நினைக்கக்கூடாது...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

minister udhayanidhi stalin talk about eps and ops

 

சென்னை கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவில் கட்டப்பட்டிருந்த அண்ணா மாளிகையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். இவ்விழாவில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் அமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார். மேலும் அவர்களுக்கு திருமண சீர் வரிசைகளையும் வழங்கினார். 

 

அதன்பிறகு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “பொதுவாக இதுபோன்ற திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்தி பேசும்போது, ‘கருணாநிதியும் தமிழும் போல...’ ‘மு.க.ஸ்டாலினும் உழைப்பும் போல...’ மணமக்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். ஆனால் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். பெண்கள் யாரும் இதை தவறாக நினைக்கக்கூடாது. பெண்களிடம் அரசியல் பேசாமல் போகவே முடியாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது? என்று அனைவருக்குமே நன்றாக தெரியும். எனவே எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல வாழக்கூடாது. சுயமரியாதையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு எது வேண்டுமோ அதைக் கேட்டு பெற்றிடுங்கள்.

 

நான் சட்டசபையில் கூட பேசியிருந்தேன். ''எடப்பாடி பழனிசாமி அவர்களே... ஓ.பன்னீர்செல்வம் அவர்களே... நீங்கள் தவறுதலாக எனது காரில் ஏறிவிட்டீர்கள். எங்கள் காரை தாராளமாக எடுத்து செல்லுங்கள். நான் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டேன். ஆனால் கமலாலயம் மட்டும் செல்லவேண்டாம்'' என்று பேசினேன். அப்போது ஓ.பன்னீர்செல்வம் எழுந்து 'எந்த காலத்திலும் எங்கள் கார் அங்கே போகாது' என்றார். ஆனால் 2 பேரும் கமலாலயத்துக்கு போட்டிப்போட்டு சென்று 2 மணி நேரம் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள்? இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை” எனக் கூறினார்.