Chief Minister of Tamil Nadu M.K.Stalin says Danger to the Constitution itself

மத்திய அரசின் செயல்பாடுகளால் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்தாகி உள்ளது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கின்றன என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக ஆளுநர் மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், நேற்று தமிழக ஆளுநர் பத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள மசோதாக்களை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தொடர்பான மசோதா; மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா; வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா; சென்னை பல்கலைக்கழக திருத்த மசோதா; சட்டப் பல்கலைக்கழகத் திருத்த மசோதா; அன்னை தெரசா பல்கலைக்கழக திருத்த மசோதா; மீன்வளம், கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதா; தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா; அண்ணாமலை பல்கலைக்கழக திருத்த மசோதா; பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்பட வகை செய்யும் மசோதா ஆகியவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “அரசியல் மாண்புகளையோ, மாநில உரிமைகளோ மதிக்காத மத்திய அரசின் ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்பு சட்டமே ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளைக் கூட மதிக்காத நியமன பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கின்றன. மதவாதம், மொழி ஆதிக்கம் உள்ளிட்ட அரசியலால் ஒவ்வொரு மாநில மக்களையும் மத்திய அரசு நடுங்க செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை மக்கள் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.