பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 30ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரவுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் இன்று (20.12.2021) பல்வேறு இடங்களில் நேரடியாக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை லால்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என். நேரு, “நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. அந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 7,200 பேர் கலந்துகொண்டனர். இதில், 858 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து திருச்சியில் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வருகிற 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தர உள்ளார். அப்போது, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைப்பதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்” என்று தெரிவித்தார்.