தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, கடந்தாண்டு மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவரை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலிஜியம்) பரிந்துரை செய்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வந்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்றல் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பின.

அதில் சில வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து முனீஸ்வர் நாத் பண்டாரி, கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம், முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்ததும், முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரி இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது நீதியரசரின் மனைவி கருணா பண்டாரி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தலைமைசெயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

Chennai cm stalin Munishwar Nath Bhandari
இதையும் படியுங்கள்
Subscribe