Skip to main content

ஒரு நாள் மழைக்கே தாங்காத முதல்வர் மாவட்டம்!: பெண் பலி; வெள்ளத்தில் சிறுவன் மாயம்

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

 

rh


சேலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழையால் நகரமெங்கும் வெள்ளக்காடானது. முன்மாதிரியாக இருக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டத்தில், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்த அவலமும் அரங்கேறியது.


சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூன் 26ம் தேதி முதல் தொடர்ந்து மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று (ஜூலை 1, 2018) இரவு 9 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, சற்று நேரத்திற்கெல்லாம் வெளுத்து வாங்கத் தொடங்கியது. சற்றும் வேகம் குறையாமல் நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.


கன மழையால் சேலம் நாராயணநகர், கிச்சிப்பாளையம், தாதுபாய்குட்டை, அம்மாபேட்டை, பச்சப்பட்டி, அசோக் நகர், நாராயணநகர் ஹவுசிங் போர்டு, சங்கர் நகர், பள்ளப்பட்டி மற்றும் சிவதாபுரம், ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. 


அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் நீர் நிரம்பியதால் அங்கிருந்து வெளியேறிய நீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் பலர் விடிய விடிய தூங்கத்தை தொலைத்து தவித்தனர். பாத்திரங்களில் தண்ணீரை அள்ளி வெளியே ஊற்றி அப்புறப்படுத்தினர். 


மழைநீர், சாக்கடைக் கழிவு நீர் மற்றும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறிய கழிவு நீரும் ஒன்றாக கலந்து வெளியேறியதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது.


இந்நிலையில், நாராயணநகரைச் சேர்ந்த முகமது ஆசாத் (15) என்ற சிறுவன், இரவு சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளான். கனமழையால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக இருந்த நிலையில், சாலை எது? சாக்கடைக் கால்வாய் எது? என்று தெரியாததால் தடுமாறி வெள்ளக்குட்டை ஓடைக்குள் விழுந்துள்ளான். வெள்ளத்தில் அடித்துச் சென்ற சிறுவனை மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், உறவினர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று காலை சிறுவனின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிறுவனை தேடும் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக கூறினார். அப்போது அங்குள்ள மக்கள் அவரை முற்றுகையிட்டு சேலம் மாநகரின் அவல நிலை குறித்து கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டனர். காவல்துறையினர் பாதுகாப்பாக ஆட்சியரை அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


கிச்சிப்பாளையம் முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆல்பர்ட் மனைவி புஷ்பா (55) மழை வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எருமாபாளையம் ஏரி பகுதிக்குச் சென்றார். சிறிது நேரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியதால் ஏரியில் நீர் வரத்து அதிகரித்தது. அதில் நீரில் மூழ்கி பலியானார். 


சேலம் மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடைத் திட்டற்காக ஆங்காங்கே சாலையில் 4 அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. பல இடங்களில் இன்னும் குழிகள் மூடப்படவில்லை. பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளும் இதுவரை முழுமையாக எந்த ஒரு பகுதியிலும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே நகரம் முழுவதும் வெள்ளம் வடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.


இது ஒருபுறம் இருக்க, அம்மாபேட்டை எல்லப்பன் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவர் வாடகை கட்டடத்தில் இயக்கி வந்த விசைத்தறிக்கூடம் கனமழையால் இடிந்து விழுந்தது. 


இதுகுறித்து அவருடைய மகன் கதிரேசன் கூறுகையில், ''லோகநாகன் என்பவருக்குச் சொந்தமான இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விசைத்தறி பட்டறை நடத்தி வருகிறோம். இதில் விசைத்தறிகள் இருந்தன. கணவன், மனைவி ஒன்றாக வேலை செய்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரை நாள் மட்டுமே வேலை நாள் ஆகும்.


மற்ற நாள்களில் இரவு நேரத்திலும் தறி நெய்யும் வேலைகள் நடக்கும். அதிருஷ்டவசமாக கட்டடம் இடிந்து விழுந்தாலும், யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. சாக்கடை கால்வாய் ஓரமாக உள்ள மண் சுவரில் ஏற்கனவே விரிசல் இருந்தது. அதனால்தான் மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்து விட்டது,'' என்றார்.


வழக்கமாக சேலம் மாவட்டத்தில் 40 முதல் 50 மி.மீ. மழை பெய்யும். ஆனால் நேற்று ஒரே நாள் இரவில் 140 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அதனால்தான் நகரமெங்கும் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. ஏற்காடு பகுதியிலும் 116 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்தால் சேதாரம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகரத்தை பொலிவுறு நகரமாக மாற்றுவதாக மாநகராட்சி நிர்வாகம் சொல்லிக் கொண்டிருந்தாலும், கழிவு நீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டுக்கே வளர்ச்சிப் பாதையில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய முதல்வரின் சொந்த ஊரான சேலம், சாக்கடை கழிவு நீரால் துர்நாற்றம் வீச்சத்துடன் நாறிக்கிடக்கிறது.

சார்ந்த செய்திகள்