Advertisment

அனைத்துக் கட்சி கூட்டம்; த.வெ.க.விற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

Chief Minister Stalin invites TVK to all-party meeting

Advertisment

நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?

ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. கூட்டாட்சியில் கோட்பாடுகளை பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

Advertisment

இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன். நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம். சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்” என்று தெரிவித்திருக்கிறார். அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 28-ந்தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மையம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மக்கள் விடுதலை கட்சி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்(மூப்பனார்), தேசிய முற்போக்கு திராவிட கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, கலப்பை மக்கள் இயக்கம், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, ஆம் ஆத்மி கட்சி, சமதா கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி என 45 அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு கட்சிகளின் தலைவர்களை நேரில் அழைக்க அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்த நேரில் அழைப்பு விடுக்கும் பணி இன்றிலிருந்தே அமைச்சர்கள் தொடங்கி உள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe