/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_247.jpg)
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பது குறித்தும், மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். “தமிழ்நாடு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்குவதை மீனவர்கள் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அடக்குமுறை இன்னும் அதிகமாகியுள்ளது. பா.ஜ.க. ஆட்சியின் போது மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சி பலவீனமாக இருப்பதால், மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது.
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். பிரதமர் சென்னைக்கு வரும்போதெல்லாம் இந்த பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்தபோதும் கச்சத்தீவை மீட்கக்கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்து விட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதை உறுதிசெய்யும் அறிக்கையை 1972 ஆம் ஆண்டு கலைஞர் வெளியிட்டார். கலைஞரின் எதிர்ப்பை மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பிறகும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து மீட்கக் கலைஞர் வலியுறுத்தினார். கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. 1954 ஆம் ஆண்டு இலங்கை வெளியிட்டவரைப்படத்தில் கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமில்லை என்ற தகவல் வெளியானது. கச்சத்தீவு இந்தியாவின் ஒருபகுதி என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி மத்திய அரசுக்கு அளித்தவர் கலைஞர். கச்சத்தீவை மீட்க கோரி தமிழ்நாடு சட்டமன்றத்திலும் கலைஞர் தீர்மானம் நிறைவேற்றினார்.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததால் தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் முரசொலி மாறன். அத்தோடு மட்டுமில்லாமல், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்குச் செவி சாய்க்காததால்நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். மேலும் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை திமுக நடத்தியது. ஆனால் சிலர் கச்சத்தீவு பற்றி அடிப்படி அறிவு இல்லாமல் குறைந்தபட்ச நேர்மை இல்லாமலும் பேசி வருகின்றனர்” தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)