Viswanathan Anand

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு சென்னையில் நடைபெற்றது. சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக ஆர்காடி ட்வார்கோவிச் 2ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணைத்தலைவராக தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் ஆகும். கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும். உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்க்கடி துவார்கோவிச்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சுமுகமாக நடத்துவதில் அவரது பங்கு இன்றியமையாதது. தலைவராக அவரது முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததைப்போல இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.