ADVERTISEMENT

“ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது” - முதல்வர் ஸ்டாலின் 

01:26 PM Jan 14, 2024 | ArunPrakash

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் தனியார் வங்கியில் அலுவலகப் பணியாளராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு காலமானார். அதன் பிறகு, பூரணம் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரது மகள் கெடுவாய்ப்பாக உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, தனது மகளின் நினைவாக கொடிக்குளம் கிராமத்தில் இருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை அங்குள்ள நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்காகத் தானமாக வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘நல்ல காரியங்களுக்கு நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்பது எனது மகள் ஜனனியின் ஆசை. அதன்படியே, எனது நிலத்தை பள்ளிக்கு தானமாக கொடுத்துள்ளேன்’ என்று கூறினார். இவரது செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசுக்கு தனது நிலத்தை தானமாக வழங்கிய பூரணம் அம்மாளை பாராட்டியுள்ளார். மேலும், அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஜனவரி 29 ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைத்தளப் பதிவில், “கல்விதான் உண்மையான அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள். ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT