Advertisment

தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறுவதா? - துரைமுருகன்

தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே ஜூன் 12 தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நேற்றைய தினம் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசினார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்த காலங்களில் எல்லாம் சட்டப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீரை பெற்றிருக்கிறோம். இது போன்ற தெளிவான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இல்லாத காலத்திலும் கூட தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் யார் முதலமைச்சராக இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவு பேணி, பேச்சுவார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளின் நலனை காப்பதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளார். ஆனால் இப்போது நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ள முதலமைச்சர் அதிமுக ஆட்சியில் இரு வருடங்கள் ஜூன் 6 மற்றும் 12 தேதிகளில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இருந்த கழக ஆட்சி காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 12.6.2001 மற்றும் 6.6.2011 ஆகிய காலங்களில் குறித்த காலத்தில் அணை திறந்து விட முடிந்தது என்பதை ஏதோ முதலமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

Chief Minister should take action to get Cauvery water

ஆனால் இன்றைக்கு நிலை அவ்வாறு இல்லை. 16.2.2018 அன்று காவிரியின் தமிழக உரிமையை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளித்து விட்டது. அதன் படி காவிரி வரைவு திட்டத்தை உருவாக்காமல், காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைக்காமல் மத்திய அரசும்- அதிமுக அரசும் கைகோர்த்து 91 நாட்கள் வீண் காலதாமதத்தை உருவாக்கியதை காவிரி டெல்டா விவசாயிகளும், தமிழக மக்களும் மறக்கவில்லை. அது மட்டுமின்றி 18.5.2018 அன்று காவிரி வரைவுத் திட்டத்தையும் இறுதி செய்து ஜூன் 1 ஆம் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 22 நாட்கள் கடந்த பிறகும் இன்று வரை காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்படவில்லை. இந்த தாமதத்திற்கு மத்திய அரசு நேரடிக் காரணம் என்றால், தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அதிமுக அரசும் முக்கியக் காரணம் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் முழுமையாக மூடி மறைக்க முயற்சித்துள்ளார். அது தமிழக விவசாயிகள் மத்தியில் எடுபடாது. காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து கடந்த 113 நாட்களில் ஆக்கபூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பதில் எந்த தடையும் இருந்திருக்காது. அதை கோட்டை விட்ட மாண்புமிகு முதலமைச்சர் தி.மு.க.வை குறை கூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலோ, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வைப்பதிலோ எவ்வித முயற்சியும் எடுக்க இயலவில்லை. மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் பேச முடியாத தன் இயலாமையை “மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க இயலாது” என்ற வடிவத்தில் நேற்றைய தினம் அவையில் அறிவித்திருக்கிறார்.

Advertisment

ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல் வேடிக்கை பார்த்து விட்டு இன்றைக்கு மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க முடியாது என்று முதலமைச்சர் கூறுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது. தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறி திசை திருப்ப முனைவது அதை விட வேதனை தருகிறது. ஆகவே விவசாயிகளின் நலனில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற மாண்புமிகு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு அதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Cavery protest chief minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe