Skip to main content

“இது மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துவருகிறார் முதல்வர்” - அமைச்சர் சி.வி. கணேசன் பேட்டி!!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

"The Chief Minister is proving that this is a government for the people" - Minister CV Ganesan

 

தமிழ்நாடு அரசு கரோனா நோய் பரவலைத் தடுப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்கள். இந்த நடவடிக்கை தொடர்பாக திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏவும் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வி. கணேசன், தினசரி கரோனா தடுப்பு நடவடிக்கைள் பற்றி பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

 

மருத்துவ சிகிச்சை சம்மந்தமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்று ஆய்வுசெய்து மக்களுக்கான சிகிச்சைகள் கிடைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் எடுத்துக் கூறிவருகிறார். அதோடு திட்டக்குடி தொகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டதும் சிகிச்சை பெறுவதற்காக கடலூர், சிதம்பரம் போன்ற மருத்துவமனைகளுக்கு சுமார் 100 கிலோ மீட்டர் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் பெரம்பலூர், அரியலூர் போன்ற ஊர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு  சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் செல்லும் நிலை உள்ளது.

 

"The Chief Minister is proving that this is a government for the people" - Minister CV Ganesan

 

இதனால் நோய்வாய்ப்பட்டவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துவருகிறார்கள். மேலும்  திட்டக்குடி, திருவள்ளூர் அரசு கலைக்கல்லூரியில் நோய் தடுப்பு தனிமைப்படுத்தும் முகாம் செயல்படுகிறது. இப்பகுதியில் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கும் அளவிற்குப் பெரிய மருத்துவமனைகள் இல்லை. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாவதை அறிந்த அமைச்சர், உடனடியாக திட்டக்குடி அரசு மருத்துவமனை மேல் தளத்தில் சுமார் 40 லட்சம் செலவில் புனரமைப்பு செய்து, கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மிக வேகமாக செய்துள்ளார்.

 

இதுகுறித்து அமைச்சர் நம்மிடம் கூறியதாவது, “இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவின்பேரில், திட்டக்குடி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பணிகள் மிக வேகமாக நடைபெற்றுவருகிறது. அது முடிந்தவுடன் அதன் மேல் தளத்தில் ஆக்சிஜன் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய படுக்கைகள் தயார் செய்யப்படும். இன்னும் இரண்டு தினங்களுக்குள் தற்போது கரோனா சிகிச்சை முகாமாக செயல்பட்டுவரும் திட்டக்குடி, திருவள்ளூர் அரசு கலைக்கல்லூரியில் 150 படுக்கைகள் அதற்கான ஆக்சிஜன் உட்பட அனைத்து வசதிகளும் தயார் செய்யும் பணி மிக துரிதமாக நடைபெற்றுவருகிறது.

 

"The Chief Minister is proving that this is a government for the people" - Minister CV Ganesan

 

இதன் மூலம் இப்பகுதியில் நோய் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் உடனடியாக இங்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளித்து காப்பாற்றப்படுவார்கள். இனிமேல் நீண்டதூரம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது இல்லை. நோய் பரவல் தற்போது குறைந்துவருகிறது, இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையை விரிவாக்கம் செய்தல், கூடுதல் படுக்கை வசதிகள் செய்வதற்கான பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும், சுகாதாரத்துறையினரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் ஆகிய மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் மிக வேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை அளிப்பதற்காக முன்வந்துள்ளன. எனவே மக்கள் நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக எந்தவித தயக்கமுமின்றி, பயமுமின்றி மருத்துவமனைக்கு வரலாம்.

 

மேலும் வர முடியாதவர்கள் 108  ஆம்புலன்ஸ் மூலம் தொடர்புகொண்டாலும் உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்கள் நலனில் தமிழ்நாடு முதல்வர் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டுவருகிறார். இது மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துவருகிறார் தமிழ்நாடு முதல்வர்” என்கிறார் அமைச்சர் கணேசன். இந்த ஆய்வின்போது விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், திட்டக்குடி வட்டாட்சியர்கள் தமிழ்ச்செல்வி, ரவிச்சந்திரன், திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தேவேந்திரன், மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் விவேக் ஆகியோர் உடன் இருந்தனர். திட்டக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்