Skip to main content

"கடந்த பத்தாண்டுகளில் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்காத நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கி வருகிறார்"- அமைச்சர் பேச்சு!

Published on 21/08/2022 | Edited on 21/08/2022

 

திண்டுக்கல்லில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகம் தலைமை வகிக்க, தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் வரவேற்புரையாற்றினார். அதேபோல், விழாவுக்கு வேடச்சந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி.தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 


அதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். அதன்படி அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க தொழிற்சங்கத்தினர் உதவ வேண்டும்" என்று கூறினார்.

 

அதனை தொடர்ந்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், "தமிழகத்தில் ஓராண்டில் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு 420 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்தில் ஏழரை லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 21 லட்சம் உறுப்பினர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ளனர். 17 நல வாரியங்களில் திருநங்கைகள் உட்பட பலர் உள்ளனர். சென்னையில் ஒரே நாளில் தலைமைச் செயலகத்தில் 57 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் நல்லாட்சி நடப்பதால் பல லட்சம் தொழிலாளர்கள் திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். 

 

பெண்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 500 பெண்களுக்கு இதுவரை நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் 107 ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங் கப்பட்டுள்ளது. இந்த விழாவில் 11 ஆயிரத்து 671 தொழிலாளருக்கு ஒரு கோடியே 97 லட்சத்து 41 ஆயிரத்து 641 ரூபாய் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லோருக்கு எல்லாம் கிடைத்திட முதல்வர் சிறப்பாக அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி வருகிறார். வீடு இல்லாதவருக்கு வீடு வழங்கும் திட்டத்தில் பத்தாயிரம் வீடுகள் கட்ட உத்தரவிட்டுள்ளார். அதற்காக ரூபாய் 4 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளார். தொழில்துறையில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக மாற்றுவது அவரது லட்சியமாக உள்ளது. அதிலும் அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக வரவேண்டும் என்பதில் முதல்வர் கண்ணும் கருத்துமாக செயல்படுத்தி வருகிறார்" என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்