
பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் சமத்துவபுரம் கிராமத்தில் நாய் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை தனது மூச்சைக் கொடுத்து காப்பாற்றிய கார் ஓட்டுநர் பிரபுவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/12/2021) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்துப் பாராட்டு தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் மூலம் வட்டாட்சியர் துணையுடன் சென்னை அழைத்து வரப்பட்ட பிரபுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பாராட்டி, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பின்னர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரபு, "வனவிலங்குகள் ஊருக்கு வருவது உணவுக்காகத்தான் என்றும், அப்படி ஊருக்குள் வரும் வனவிலங்குகளை யாரும் துன்புறுத்த வேண்டாம் என்றும் முடிந்த வரை அவற்றுக்கு உணவளியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் மரக்கிளையில் இருந்து குரங்கை எடுக்கும்போது கூட என்னை கடிக்கவில்லை. அதுவும் ஒரு உயிர் தான் என்பதால் காப்பாற்றினேன். என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது குரங்குதான். முதலமைச்சர் மூலம் கிடைத்த மரியாதைக்கு காரணம் குரங்கு" என உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தார்.