Skip to main content

ஐ.ஏ.எஸ். கோவிந்தராவை பாராட்டிய முதலமைச்சர்! 

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

 The Chief Minister praised IAS Govindaro

 

ஒருங்கிணைந்த பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிக்கலான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உயர்நிலை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக அரசு எடுத்துள்ள சிறப்பு முயற்சிகளையும், அரசு நிதியைத் திறம்படச் செயல்படுத்தியமைக்காகச் சிறந்த சேவைக்கான விருதைக் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ். பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ். கோவிந்தராவுக்கு தமிழக முதல்வர் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, இந்தச் சாதனைக்காகப் பாடுபட்ட ஒட்டுமொத்தக் குழுவையும் வாழ்த்தியுள்ளார்.

 

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2009 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்டு, அதன்பிறகு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டமாகப் பெயர் மாற்றம் பெற்று 2012 ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  என்று செயல்பெற்று 5 ஆண்டுகள் நீடித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டு, ஓராண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் வரை காப்பீட்டுத் தொகை  வழங்கப்படுகிறது.

 

ஒன்றிய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு 86.50 இலட்சம் குடும்பங்கள் பிரதான் மந்திரி ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்றிய அரசின் பங்கு 60 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும் வழங்கப்பட்டுச் செயல்படுத்தி வருகின்றன.

 

இத்திட்டத்தில் 1513 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும், 11 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் 975 தனியார் மற்றும் 854 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 1,829 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2009 முதல் 2023 வரை 1,31,86,958 பயனாளிகள் 12,219 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர். 

 

இதில் அரசு மருத்துவமனைகளில் 27,97,258  பயனாளிகளுக்கு ரூ. 4,385 கோடி காப்பீட்டுச் செலவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் 2018 முதல் 2023 வரை 17,22,512 பயனாளிகள்  2,594  கோடி ரூபாய் காப்பீட்டுச் செலவில்  சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தின் முக்கியச் சிறப்பம்சமாக அதிக செலவாகும் 8 உயர் சிறப்பு சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காதுவால் நரம்பு உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல்  மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, செவிப்புல மூளைத் தண்டு உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தேவைப்படும் தொடர்  சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.  

 

இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 2012 முதல் 2023 வரை 13,934 பயனாளிகளுக்கு 1,155.12 கோடி ரூபாய் காப்பீட்டுத் திட்டத் தொகுப்பு நிதியில் சிறப்பு அறுவை சிகிச்சை வழங்கப்பட்டது. இதுபோன்று அரசு நிதியை சரியான வகையில் இந்த ஏழை எளிய மக்களுக்குக் கொண்டு சேர்த்ததில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகமே சிறப்பாகச் செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்