
பெரியாரிய சிந்தனையாளரும் திராவிட இயக்கத்தின் எழுத்தாளர்களில் ஒருவருமான பேராசிரியர் மங்கள முருகேசன் இன்று இயற்கை எய்தினார். அவரது இறப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, “பெரியாரிய சிந்தனையாளரும் திராவிட இயக்கத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பேராசிரியர் மங்கள முருகேசன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பேராசிரியர் மங்கள முருகேசன் சுயமரியாதை சிந்தனை மிளிரும் ஏராளமான நூல்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குப் படைத்தளித்த பெருந்தகை ஆவார்.
"தொண்டில் உயர்ந்த தூயவர் ஈ.வெ.ரா. மணியம்மையார்” என்ற இவரது வரலாற்று நூல், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பரிசு வழங்கப்பட்ட பெருமைக்குரியது. அத்துடன் சூழலியல் குறித்து இவர் எழுதிய "சுற்றுச்சூழல் பாதுகாப்பு" என்ற நூலுக்கும் தமிழ்நாடு அரசு பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் மாறாது நின்று அவர்களது கொள்கைகளை எந்நாளும் பிரதிபலித்தவர். தமது நுண்மாண் நுழைபுலம் செறிந்த உரைகள் மூலம் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே பகுத்தறிவு பேரொளியைப் பரவச் செய்த தலைசிறந்த கல்வியாளர்தான் பேராசிரியர் மங்கள முருகேசன்.
இத்தகைய பெருமை வாய்ந்த பேராசிரியர் மங்கள முருகேசனின் மறைவு திராவிட இயக்க அறிவுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.