Mahalakshmi Teacher

கரோனா காலத்திலும் ஆசிரியை ஒருவர் தன் மாணவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையால் அவர்கள் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பிப்பதை முதல்வர் பழனிச்சாமி பாராட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டைஅடுத்துள்ள பாலூரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (49). தமிழ் பட்டதாரி ஆசிரியையான இவர் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு தமிழ் பாடம் எடுத்து நடத்தி வருகிறார். சில மாதங்களாக தமிழகம் முழுவதும் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பிள்ளைகளுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியை மகாலட்சுமி, அவர்கள் தனது கணவர் திருஞானமூர்த்தி உதவியோடு தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று அவர்களை அழைத்து அப்பகுதியில் உள்ள மரத்தடியில் சமூக இடைவெளியைக் கடைபிடித்து உட்கார வைத்து பாடம் நடத்தி வருகிறார்.

Advertisment

அதோடு கரோனா பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வியின் மீது அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களை திறந்தவெளியில், சமூக இடைவெளி விட்டு அமர வைத்து பாடம் நடத்தும் ஆசிரியை மகாலட்சுமியின் பணியை கண்டு அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கரோனா பரவல் காரணமாக பலரும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் அப்படிப்பட்ட நிலையில் அந்த அச்சத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கல்வி பணியாற்றும் ஆசிரியையின் அரும்பணியைஅறிந்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் ட்விட்டர் மூலம் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

“ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகளின்வீடுகளுக்கு சென்று, அவர்கள் படிப்பு முன்னேற்றத்திற்கு பாடம் நடத்தி வழிமுறைகளைக் கூறும் நடுவீரப்பட்டு அரசு பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமியின் செயல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது அவருக்கும் அவர் சேவைக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும்” என்று முதல்வர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா முரி அவர்கள் ஆசிரியை மகாலட்சுமி நேரில் அழைத்து அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறியுள்ளார். இவரைப் போன்று அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியை ஆசிரியர்கள் அவரவர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று கல்வியையும் கரோனா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.