Skip to main content

புதுச்சேரியில் 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி தாக்கல்!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்களுக்காக ரூபாய் 7,530 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்தார். அதில் கடந்த ஆண்டை விட புதுச்சேரி அரசு வருவாய் ரூ.505 கோடியாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட நாராயணசாமி புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 2,177 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும்  புதுச்சேரி அரசின் மொத்த கடன் தொகை 7,730 கோடி என்றவர் 2017-18 ஆம் ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தில் தனிநபர் வருமானம் ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார். 


 

Chief Minister Narayanasamy submits Budget for Rs 7,530 crore in Puducherry 2018-19


 

மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் வேளாண்துறை இனி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை என பெயர் மாற்றப்படும். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெறக்கூடிய பயிர்கடனை தவனை தவறாமல் செலுத்தும் விவசாயிகளுக்கு புதுச்சேரி அரசு 4% அரசு மானியமாக செலுத்தி வட்டியில்லா கடன் பெற வழிவகை செய்யப்படும். புதுச்சேரியில் விவசாய பல்கலைக்கழகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்க மாட்டுத்தீவனம், கன்றுத்தீவனம் வாங்க பால் உற்பத்தியாளர்களுக்கு 75 சதவீதம் மாணியம் வழங்கப்படும்.

 

 

 

இந்தாண்டு 550 ஆசிரியர் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிபி.எஸ்.சி.க்கு இணையான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். காரைக்காலில் ரூ.400 கோடிக்கு ஜிப்மர் மருத்துவமனை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். 1.5 லட்சம் வரை வருமானம் பெறும் ஏழை மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சேவை பெறும் வகையில் முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.  


 

Chief Minister Narayanasamy submits Budget for Rs 7,530 crore in Puducherry 2018-19


 

தலைமைச்செயலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட 19 இடங்களில் இலவச வைபை ஏற்படுத்தப்படவுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினை வலிமைபடுத்த 434 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரூ.2 லட்சம் ஆண்டு வருமானம் பெறும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மணப்பெண்களுக்கு வழங்கி வந்த ரூ.75 ஆயிரம் நிதியுதவி ரூ. 1லட்சமாக உயர்த்தப்படும். 

 

ஆகிய திட்டங்களை நாராயணசாமி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து பேரவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்