நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவுக்குப்பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,''சின்ன கலைவாணர் விவேக்கின் மறைவுச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு திரைத்துறைக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற படங்களில் நடித்துச் சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தவர். பிளாஸ்டிக் தடை, கரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக இருந்தவர். கலைச்சேவையாலும்,சமூகச் சேவையாலும்பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய பேரிழப்பு'' எனத் தெரிவித்துள்ளார்.