Skip to main content

மீனவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Chief Minister M.K.Stal's praise for fishermen

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தல். சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மீட்புப் பணியில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர், மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், ‘THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS’ என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி சொன்னதை நினைவுபடுத்துகிறது. அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.