ADVERTISEMENT

நரேஷ் குப்தா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

09:24 AM Apr 11, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா(73) ஐ.ஏ.எஸ். சென்னையில் காலமானார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த நரேஷ் குப்தா, 1973ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்டம் 1984ல் உருவாக்கப்பட்டு, 1985ம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் தனி மாவட்டமாக செயல்பட துவங்கியது. இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டவர் நரேஷ் குப்தா.

நரேஷ் குப்தா, ஆளுநரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார். இவர், 1998 முதல் 2000ம் ஆண்டு வரையும், 2005 முதல் 2010 வரையிலும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர். 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் செயலாளராகவும் பணியாற்றினார். 2009ம் ஆண்டு முதல்முறையாக வெப் கேம்ரா மூலம் வாக்குப்பதிவைக் கண்காணிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

2010ம் ஆண்டு ஓய்வு பெற்ற நரேஷ் குப்தா சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 5ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், ‘முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும் காந்தியப் பற்றாளருமான நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.

உள்துறைச் செயலாளர், மாநில திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலாளர் என பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக விளங்கியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நரேஷ் குப்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, சிரத்தையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT