Skip to main content

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! 

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Chief Minister M.K.Stal's letter to Prime Minister Narendra Modi!

 

பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு இன்று (29/07/2022) காலை 11.30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத் சென்றார். 

 

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (29/07/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக, ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

 

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இந்த விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை பிரதமருக்கு தெரிவித்துள்ளார். 

 

இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் இந்திய பிரதமர் காட்டி வரும் ஆர்வத்தை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

 

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, வரும் 2024- ஆம் ஆண்டு ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு, ஜூன் 6- ஆம் தேதி அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டத்தில் , கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இவ்விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு, இது தொடர்பாக, மே 23- ஆம் தேதி அன்று எழுதியுள்ளதாகவும், வரும் செப்டம்பர் இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில், விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்