Skip to main content

சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

Chief Minister M.K.Stalin's condolence on Sedapatti Muthiah's demise!

 

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (வயது 77) உடல்நலக்குறைவுக் காரணமாக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (21/09/2022) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். 

 

நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா, தமிழக சட்டப்பேரவையின் தலைவராக 1991- ஆம் ஆண்டு முதல் 1996- ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். 

 

கடந்த 2006- ஆம் ஆண்டு கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட சேடப்பட்டி முத்தையா, அப்போது முதல், கட்சியின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார். 

 

அண்மையில் மதுரை சென்றிருந்த போது, உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி, தற்போது வந்தடைந்து வேதனையைத் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நிவாரண முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Chief Minister M.K.Stal's inspection at the relief camp

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

இந்நிலையில் சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கேட்டறிவதோடு, ஆய்வு நடத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, அமைச்சர் கே.என்.நேரு, அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கு உள்ளனர். வடசென்னை பகுதியான கண்ணப்பர் திடல் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வரை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சிந்தாதரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று  தமிழக முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்