Chief Minister M.K.Stalin wrote letter to union minister jaishankar aboout fishermen

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இத்தகைய சூழலில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் வழக்கம் போல் விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இந்த மீனவர்கள் 11 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேரும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஒரு வாரங்களில் தமிழக மீனவர்கள் மீது மூன்று முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும், அவர்களது மீன்பிடி விசைப்படகும் நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை நான் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். 2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களைத் தாக்கியுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம். எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு, உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment