Chief Minister M.K.Stalin surprise inspection at the police station

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பழவந்தாங்கலில் உள்ள காவல் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் மக்களின் புகார்களைக் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டுவரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார். பின்னர் காவலர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.