Advertisment

"கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டாஸ்" - காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவு!

remdesivir medicine, oxygen cylinder chief minister mkstalin order police

தமிழகத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றைப் பதுக்கிக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பான முதல்வரின் உத்தரவில், "மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மைக் கடமையாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

Advertisment

உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்துவரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும்இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டுவருகிறது. மேலும், இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிவருகிறார்கள்.

எளிய மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதே நேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனைசெய்கிறார்கள்.

அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.

தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றித் தொடர்ச்சியாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டுவரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு முதல்வர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief minister coronavirus police Remdesivir
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe