ADVERTISEMENT

அமுதா ஐ.ஏ.எஸ்.க்காக டெல்லியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

11:28 AM Apr 06, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (5ஆம் தேதி) விழுப்புரம் மாவட்டம், கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்துவைத்தார். இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களோடு மக்களாக, மக்களுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு துறை இந்த உள்ளாட்சித்துறை. அந்தத்துறையின் அமைச்சராக நான் ஏற்கனவே இருந்திருக்கிறேன். ஆகவே, இதில், சிறப்பாக பணியாற்ற வேண்டும், இந்தத் துறை மேலும், மேலும் வளர்ச்சியடைய வேண்டும், மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை உடனடியாக நிறவேற்றித்தரக்கூடிய துறையாக இது அமைந்திட வேண்டும் என்று அந்தத் துறையினுடைய அமைச்சராக இருந்த போது நான் எண்ணியதுண்டு. இப்பொழுது முதலமைச்சராக ஆனதற்குப் பிறகும் நான் எண்ணிக்கொண்டிருப்பது உண்மை.

அதனால்தான் இந்தத் துறையிலே யாரை அமைச்சராக நியமிக்கலாம் என்று யோசித்த போது, நம்முடைய பெரியகருப்பன் என்னுடைய எண்ணத்திலே தோன்றினார். அதனால் அவரை இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று பணியாற்ற வேண்டுமென்று சொல்லி அந்தத் துறையை இன்றைக்கு அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு, இந்தத் துறையில் செயலாளராக இருக்கக்கூடிய அமுதா, ஐ.ஏ.எஸ்., நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பொழுது, நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, அவர் தலைநகர் டெல்லியிலே, அதுவும் குறிப்பாக பிரதமர் அலுவலகத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் டெல்லிக்குச் சென்ற போது அவரை சந்தித்துப் பேசினேன்.

"நீங்கள் ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்திருக்கிறீர்கள். பல்வேறு அரசுத் துறையிலே பொறுப்பிலிருந்து பணியாற்றி இருக்கிறீர்கள். உங்கள் பணிகளை பார்த்து நான் வியந்ததுண்டு. ஆகவே, ஏன் நீங்கள் டெல்லியில் இருக்கிறீர்கள், தமிழ் நாட்டிற்கு வந்துவிடலாமே, ஒரு முக்கியமான துறையை உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்ன போது, நீங்கள் சொன்னால் அடுத்த வினாடியே வந்துவிடுகிறேன் என்று என்னிடத்திலே உறுதி தந்தார்.


அதனால், நான் உடனடியாக டெல்லியில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளோடு, பிரதமர் அலுவலகத்தோடு எங்கள் அதிகாரிகள் மூலமாக தொடர்பு கொண்டு, இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு அவரை வரவழைத்து உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக பொறுப்பேற்று எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றிவருகிறார்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT