
சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரே வாரத்தில் அமலாக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்கள், சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுவருகிறது; தமிழில் வழிபாடும் தொடங்கியுள்ளது. அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிதி மற்றும் 15 வகையான பொருட்களை வழங்கியிருக்கிறோம். அமைச்சர் சேகர் பாபு செயல் பாபுவாகப் பணியாற்றுகிறார். சட்டப்பேரவையில் அறிவித்த திட்டத்தை ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு. எள் என்று சொல்வதற்கு முன்னால் எண்ணெய்யாக விரைந்து வேலை செய்கிறார் அமைச்சர் சேகர் பாபு. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.