
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் (24/05/2021) முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.
இந்த ஆலோசனையில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை அடையும். ஜூன் முதல் வாரத்துக்குள் கரோனா உச்சத்தை அடைய முடியும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 36,000ஐ கடந்த நிலையில், ஜூன் முதல் வாரம்வரை 14 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.