Advertisment

தீரன் சின்னமலை நினைவு தினம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

Chief Minister MK Stalin Respect to Theeran Chinnamalai Memorial Day  

Advertisment

தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று (03.8.2024) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 09.00 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளசெய்திக்குறிப்பில், “ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் தீரன் சின்னமலை பிறந்தார். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி. தீரன் சின்னமலை இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து சிறந்த இளம் வீரராகத் திகழ்ந்தார். பல்வேறு துணிச்சலான போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்து, போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத்தந்தார். இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியை அடியோடு ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

Chief Minister MK Stalin Respect to Theeran Chinnamalai Memorial Day  

Advertisment

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்டெடுக்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து செயல்பட்டார். கொங்கு மண்ணில், அன்றைய மைசூர் அரசு வசூலித்த வரியைத் தடுத்து, ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை’ என்று பெயர் பெற்றார். மைசூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்று போர்களிலும் திப்பு சுல்தான் தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள் பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். திப்பு சுல்தான் மாவீரன் நெப்போலியனிடம் நான்காம் மைசூர்ப் போரில் தங்களுக்கு உதவி புரியக் கோரி தூது அனுப்பினார். என்னதான் நெப்போலியன் உதவி புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும் வீரத்துடனும் திப்பு சுல்தானும் சின்னமலையும் அயராது போரிட்டனர். மைசூர் மன்னர் திப்பு சுல்தான் நான்காம் மைசூர்ப் போரில் போர்க்களத்திலேயே வீரமரணமடைந்தார்.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் கோபமடைந்து தீரன் சின்னமலையைச் சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் ஆங்கிலேயர்கள் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர். இத்தகைய சிறப்புகள் கொண்ட விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் சென்னை, கிண்டியில் முழு உருவச் சிலையினை அமைத்தார். இதனைக் கடந்த 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி (04.10.1998) அன்று கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe