தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுகவின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சட்டமன்றத்திற்காக கட்டி, பின்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்ட ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினார். அங்கு குழந்தைகள் முன்னாள் முதலமைச்சர் கலைஞரை போல் ஒப்பனை செய்துவந்திருந்தனர். அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.