Chief Minister MK Stalin order for Krishnagiri school girl issue

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில், பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (21.08.2024) நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது குறித்த விசாரணையைத் துரிதமாக மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும். காவல்துறைத் தலைவர் தலைமையில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திடவும், சமூக நலத்துறை செயலாளர் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்.சி.சி. திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்குப் பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட என்.சி.சி. பயிற்றுநர்கள் ஆறு பேரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisment

Chief Minister MK Stalin order for Krishnagiri school girl issue

மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிராகச் செயல்பட்ட இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய போலியான என்.சி.சி. பயிற்றுநர்கள் இதே போன்று மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு. சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், பவானீஸ்வரி காவல்துறைத் தலைவர் அவர்களின் தலைமையில், சிறப்புப் புலனாய்வுக் குழு (S.I.T.) ஒன்றை அமைத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திடத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரியப் பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழு (M.D.T. - Multi Disciplinary Team) ஒன்றை அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்.

Advertisment

Chief Minister MK Stalin order for Krishnagiri school girl issue

இக்குழுவில், மாநில சமூகப் பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ்,பள்ளிக்கல்வி இயக்குநர்.லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா மற்றும் சத்யா ராஜ், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த சம்பவம் குறித்த விசாரணையைத் துரிதமாக மேற்கொண்டு,15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையைப் பெற்றுத்தர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.