
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/11/2021) தலைமை செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 23 கோடியே 78 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான விடுதி கட்டடங்கள் மற்றும் மூன்று பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன் இ.ஆ.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் வி.சி.ராகுல் இ.வ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.