Skip to main content

மயிலாடுதுறைக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Chief Minister MK Stalin left for Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் தோட்டம் பால்பண்ணை என்ற பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (04.03.2024) காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4.15 மணியளவில் திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இன்று இரவு 8.15 மணியளவில் சீர்காழி ரயில் நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றடைகிறார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று இரவு ஓய்வெடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு கார் மூலம் மயிலாடுதுறை சென்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்வை முடித்துவிட்டு மதியம் 1 மணியளவில் திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடைகிறார். முதல்வரின் இந்த ரயில் பயணம் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சார்ந்த செய்திகள்