
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட யூபிஎஸ் நிறுவனம், இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை போரூரில் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்திய அளவில், இரண்டாவது பெரிய பொருளாதாரமாகப் பல்வேறு தரவரிசைகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள மட்டுமல்ல, இதனை மேலும் வளர்க்க விரும்புகிறோம். பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் பொருளாதார வல்லுநர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியுள்ளதை பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் விரிவாக்கத் திட்டத்திற்கான முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம். வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், துறை சார்ந்த கொள்கை வெளியீடுகளை வெளியிட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே. விஷ்ணு, யூபிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அலுவலர் பால சுப்ரமணியன், தலைமை மனித வள அலுவலர் டேரல் ஃபோர்டு, இந்தியாவிற்கான துணைத் தலைவர் சுப்ரமணி ராமகிருஷ்ணன், சென்னை தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் பி. ஸ்ரீராம், கேரியர் டெவலப்மண்ட் மையத்தின் முதல்வர் டாக்டர் பாலமுரளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.