
வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் (நாளை) தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் முடிவுறும் நிலையில், மேலும் கூடுதல் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/07/2021) பிற்பகல் 01.00 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறப்பது, பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறப்பது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை நடத்திவருகிறார்.
கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் கூறுகின்றன.